மராவி: பிலிப்பைன்ஸ் நாட்டின் மராவி நகரில் போர் விமானம் தவறான இலக்கில் குண்டு வீசியதில் ராணுவ வீரர்கள் 11 பேர் பலியாயினர். இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மராவி நகர் முஸ்லிம் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நகரை மீட்க பிலிப்பைன்ஸ் ராணுவம், தீவிரவாதிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளது. ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், தீவிரவாதிகள் மீது குண்டு வீசி வருகின்றன. இதுவரை நடந்த தாக்குதலில் 89 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். சிலர் சரணடைந்துள்ளனர். அவர்கள் ராணுவத்துக்கு உளவுத் தகவலை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் ராணுவத்தின் எஸ்-211 ரக விமானம் மராவி நகரில் தீவிரவாதிகளின் இருப்பிடம் நோக்கி நேற்று குண்டு வீச்சில் ஈடுபட்டது. முதல் மூன்று குண்டுகள் தீவிரவாதிகளின் இலக்குகளை தாக்கின. மற்றொரு குண்டு தீவிரவாதிகளுடன் சண்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களின் இருப்பிடத்தில் விழுந்தது. இதில் 11 வீரர்கள் பலியாயினர். இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ரெஸ்டிடுட்டோ படில்லா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment