ஸ்ரீஹரிகோட்டா: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிக எடை கொண்ட கனரக ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம், ஜிசாட் 19 செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம், ஜிசாட் 19 செயற்கைக்கோள் சரியாக மாலை 5.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. முன்னதாக இதற்கான 25 மணி நேரம் 30 நிமிட கவுன்டவுன் நேற்று மாலை 3.58 மணிக்கு தொடங்கியது. இதனையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் நான்கு நிலைகளிலும் எரிபொருள் நிரப்பும் பணிகளை மேற்கொண்டனர். அடுத்த தலைமுறைக்கான ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம், தற்போது தான் முதன் முதலாக செயற்கைக்கோளை விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்தியுள்ள விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதிக எடைகொண்ட செயற்கைகோள்கள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியன் வகை ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இதை மாற்றியமைக்கும் விதமாக கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை இஸ்ரோ உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மிகப்பெரிய ராக்கெட் 4 ஆயிரம் கிலோ வரை உள்ள செயற்கைக்கோள்களை சுமந்து செல்லக்கூடியது. தற்போது இந்த ரக்கெட்டில் அனுப்பப்பட்டுள்ள ஜிசாட்-19 செயற்கைக்கோளின் மொத்த எடை 3,136 கிலோ. இந்த செயற்கைக்கோள் ராக்கெட் புறப்பட்ட நேரத்திலிருந்து 16-வது நிமிடம் 20-வது வினாடியில் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தபட்டுள்ளது. மேலும் தகவல் தொடர்பு மேம்பாட்டுக்காக இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 4 ஆயிரத்து 500 வாட் திறன் கொண்ட 2 பேட்டரிகள், 2 ஆன்டெனாக்கள், சூரிய தகடுகள் மற்றும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப்பாதையில், குறைந்த பட்சம் 175 கி.மீட்டர் அருகாமையிலும், அதிகபட்சமாக 35,975 கி.மீட்டர் தொலைவிலும் நிலை நிறுத்தப்படும். நிலை நிறுத்தப்பட்ட அடுத்த வினாடியிலிருந்து இந்த செயற்கைக்கோள் தனது பணிகளை தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஜிசாட்-19 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, இஸ்ரோவின் சாதனை மைல்கற்களில் குறிப்பிடத்தக்கதாகும்.இஸ்ரோ இது வரை 2.2 டன் முதல் 2.3 டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை மட்டுமே தனது பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி மார்க் 2 ராக்கெட்டுகள் மூலம் செலுத்தி வந்தது. அதற்கு அதிகமான எடைக் கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் ஏரியன்-6 ராக்கெட் மூலம்அனுப்பி வந்தது. தற்போது ஏரியன்-6 ராக்கெட்டுக்கு இணையான திறன் கொண்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை தற்போது இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இது 640 டன் எடையுள்ளது. 200 பெரிய யானைகளின் எடைக்கு சமமானது. இதில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 15 ஆண்டுகால ஆராய்ச்சிக்குப்பின் இந்த இன்ஜினை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.
அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை அனுப்புவதற்காகவே இந்த ஜம்போ ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக இந்த ராக்கெட் ஜிசாட்-19 தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 உருவாக்கும் திட்டத்துக்கு கடந்த 2000-ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இஸ்ரோவின் எதிர்கால ராக்கெட் இதுதான். இந்திய தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மட்டும் அல்லாது வெளிநாட்டு தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை அனுப்ப இஸ்ரோவுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டின் வெற்றிப் பயணம் இஸ்ரோவுக்கு சர்வதேச சந்தையை ஏற்படுத்தி கொடுக்கும். உலகளவிலான தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் 6 முதல் 6.5 டன் எடையுள்ளதாக இருக்கும்.
நெட் வேகம் அதிகரிக்கும்:
இந்தியா இதுவரை 41 செயற்கைக்கோள்களை பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தியுள்ளது. இவற்றில் 13 செயற்கைக்கோள்கள், தகவல் தொடர்புக்காக அனுப்பப்பட்டவை. தற்போது அனுப்பப்பட்டுள்ள ஜிசாட்-19, சுமார் 7 செயற்கைக்கோள்களின் திறனுக்கு நிகரானது. இன்னும் சில மாதங்களில் ஜிசாட்-11 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் அனுப்படவுள்ளது. இந்த இரு செயற்கைக்கோள்கள் இந்தியாவில் இன்டர்நெட்டின் வேகத்தை சர்வதேச தரத்துக்கு நிகராக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment