சிரியாவில் கடந்தாண்டு உள்நாட்டுப் போரின்போது கட்டட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட ஒரு சிறுவனின் புகைப்படம் உலக மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தச் சிறுவனின் பெயர் ஓம்ரான்.
அவன் தற்போது எப்படி இருக்கிறான் என்று தெரிந்துக் கொள்வதற்கு முன்னர் இடிபாடுகளிலிருந்து ஓம்ரான் மீட்கப்பட்டது பற்றி சின்ன ரீகேப்...
கடந்தாண்டு கிளர்ச்சியாளர்கள் வசம் சிக்கிய சிரியாவின் அலெப்போ நகரை மீட்க அரசின் விமானப்படைகள் தாக்குதல் நடத்தின. இதனால் அலெப்போ நகரம் போர்க்களமானது. அந்தச் சூழலில் குவாட்ரிஜ் என்ற இடத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது. அந்தக் கட்டடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்றபோது, இடிபாடுகளில் சிக்கியிருந்த ஐந்து வயதுச் சிறுவன் ஓம்ரான் தக்னீஷை ராணுவத்தினர் மீட்டெடுத்தனர்.
ஓம்ரான் தலையில் ரத்தக் காயங்கள்.. உடல் முழுக்கத் தூசி.. இந்தக் கோரக் காட்சி இணையத்தில் வைரலாகப் பரவியது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாத ஓம்ரான் தன் தலையில் வழிந்த ரத்தத்தைத் துடைத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான். அந்த வீடியோ காட்சி உலகத்தையே துடிக்கவைத்தது. உலக மக்களின் நெஞ்சை உலுக்கிய அந்தக் காட்சி சிரியாவின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
உலக மக்களின் அன்பைப் பெற்ற அந்தச் சிறுவன் தற்போது எப்படி இருக்கிறான் என்று சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஓம்ரான் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் அவர் பெற்றோர்களுடன் அலெப்போ நகரில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவரின் அண்மை புகைப்படம் ஒன்றும் வெளியாகிவுள்ளது. புன்னகையுடன் போட்டோவுக்குப் போஸ் கொடுத்துள்ள ஓம்ரானுக்கு நெட்டிசன்ஸ் வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் பதிவு செய்து வருகின்றனர்!
No comments:
Post a Comment